மறவாதே மனமே!
ஆர்.சுமதி
Belletristik/Erzählende Literatur
Beschreibung
பார்வதியும், அம்சா மாமியும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.
“பார்வதி... என்னடி இது, உன் புள்ளையாண்டான் ஒரு குட்டியோடு வர்றான். என்ன அசிங்கம்!”
பார்வதிக்கும் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது போல் இருந்தது. ஆனால், மாமி எதிரே மானம் போகாமல் பார்த்துக் கொள்ள அவள் தவித்தாள்.
“என்ன மாமி... அசிங்கம் அது இதுன்னுகிட்டு! தன்கூட வேலை பார்க்கிற பொண்ணா இருக்கலாம். இப்ப ஆம்பளையும் பொம்பளையும் சகஜமா பழகுதுங்களே?”
“அதுக்கு இப்படி ஒட்டி உரசிக்கிட்டா போவாங்க? அந்தப் பொண்ணு உன் பையன் இடுப்பை என்னமா உடும்புப் பிடியா புடிச்சுக்கிட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தா... அருமை பெருமையா ஒண்ணு பெத்து அதையும் இப்படி விட்டுட்டியேடி! அவள் என்ன சாதியோ... குலமோ? கடவுளே...”
பார்வதியால் எதுவும் பேச முடியவில்லை. அவளுக்கு அடிவயிறு கலங்கியது.
“இந்தக் காலத்துல நடையா நடந்து நாம தேடி கட்டி வச்சதுங்களே உள்ளே வந்த ரெண்டு நாளில் நம்மை எந்த ஊருன்னு கேட்குதுங்க. இப்படி தானாக வர்றதுங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கணவனை கைக்குள் போட்டுக்கிட்டு நம்மை ஒருவழி பண்ணிடும். ஆரம்பத்திலேயே நாம எச்சரிக்கையா இருக்கிறது நல்லது.”
“என்ன மாமி நீங்க? என்னமோ கல்யாணமே நடந்துட்ட மாதிரி பேசுறீங்க? நான் நடக்க விட்டுடுவேனா? சாதி, மதம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துதான் என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணுவேன். நான் பார்க்கிற பொண்ணுதான் என் வீட்டுக்கு மருமகளாக வரணும்.”
“அதை, உன் புள்ளையாண்டான் கேட்கணுமே!”“கேட்காம எங்க போவான்? அவன் எனக்குப் பயந்தவன்.”
“காதல் வந்துட்டா, இந்தக் காலத்துல பயமாவது... கத்திரிக்காயாவது? இதோ பாரு... வீட்டுக்குப் போனதும் தடாலடியா அவனைப் பிடிச்சு கத்தாதே. மெதுவா கல்யாண பேச்சை எடு. அவனாக சொல்லட்டும். அப்புறம் ஒரு பிடி பிடி” மாமி திட்டம் போட்டுக் கொடுத்தாள்.
இருவரும் தங்கள் வீட்டுக்கு வந்தனர். தனது அம்சா மாமி, பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரி.
பார்வதி, வீட்டுக்குள் நுழையும் போது, முற்றத்தைப் பார்த்தாள். கேசவனின் “பைக்” இல்லை.
‘அவன் எங்கே போனான்? அவளை எங்கே இறக்கி விட்டான்?’
உள்ளே வந்தாள்.
திண்ணையில் அமர்ந்திருந்தார், கணவர் முருகேசன். அவர் கையில் செய்தித்தாள்.
“என்னங்க... உங்க அருமை பையன் வந்தானா?” கேட்டவாறு, அருகில் அமர்ந்தாள்.
“வந்தான்... யாரோ நண்பனைப் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ளேகூட வராம அப்படியே போயிட்டான்.”
“இன்னைக்கு என்ன காரியம் நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“என்ன நடந்தது? நீ கோவிலுக்கு போயிட்டு வர்றே. அவ்வளவுதானே?”
“அதுமட்டுமில்லை” என்று இழுத்தவள், வழியில் தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.
“கொடுத்து வச்சவன். அந்தக் காலத்துல எதிரே வர்ற பொண்ணை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு தொடை நடுங்கும்.”
“என்ன... கிண்டலா?”
“கிண்டல் இல்லை. இப்போ என்ன பண்ணுறது? அவன் இஷ்டப்பட்ட பொண்ணையே கட்டிவச்சுட்டா போச்சு.”
“போதும்... நீங்க ஒருத்தரே போதும். இந்தக் குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்.கணவனோடு அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேசவன், வண்டியில் வந்து இறங்கினான். உற்சாகமாக அவன் பெற்றோரை நோக்கி வரவும், ஆத்திரத்தில் கொதித்தாள், அம்மா.
அவன், அதை சட்டை செய்யவில்லை.
“அம்மா! பசிக்குது” என்றான்.
“இப்போ என்னால் டிபனெல்லாம் பண்ண முடியாது. காப்பி வேணா போட்டுத் தர்றேன்.”
“காப்பி வேண்டாம்! வர்ற வழியில என் சகாவோடு காப்பி குடிச்சுட்டேன்.”
‘ஆம்பளை சகாவா? பொம்பளை சகாவா?’ அவசரமாகக் கேட்பதற்கு அம்மாவுக்கு நாக்கு துடித்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“அவன்தான் பசிக்குதுங்கிறானே... ஏதாவது பண்ணிக் கொடேன்” என்றபடி முருகேசன் உள்ளே வந்தார்.
பார்வதி கோபமாக சமையலறைக்குள் நுழைந்தாள். எரிச்சலோடு, பாத்திரங்களை போட்டு உருட்டினாள்.
“அம்மாவுக்கு என்னாச்சு? கோபமாக இருக்கிற மாதிரி தெரியுது?” அப்பாவைப் பார்த்து கேட்டபடியே தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், கேசவன்.
“கொஞ்ச நேரத்துல தெரியும்... நீயே பாரு” என்றபடி அவரும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தார்.
சில நிமிடங்களில் சூடாக ரவா உப்புமாவுடன் வந்தாள், பார்வதி. ‘டங்’கென மகன் எதிரே வைத்தாள். அவன் சாப்பிடத் தொடங்க, அம்மா இங்கும் அங்கும் உலவினாள்.
‘முதலில் கல்யாண பேசசை எடு’ என அம்சா மாமி சொன்னது மறந்து போனது.
அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தவளைப் போல் இருந்துவிட்டு திடீரென கத்தத் தொடங்கினாள்.
“ஏன்டா... உன் இடுப்பைப் புடிச்சுக்கிட்டு வண்டியில் ஒருத்தி வந்தாளே... அவ யாருடா?”
அதிரடியாக அம்மா இப்படிக் கேட்பாள் என்பதை எதிர்பார்க்காத கேசவன், ஒரு கணம் ஆடித்தான் போனான்
Kundenbewertungen
R.Sumathi, family stories, drama, romance, Kudumba Novel, contemporary fiction, relationship